News Update :

ஒரு கண்ணோட்டம் - திருச்சியில் நரேந்திர மோடியின் பேச்சு.

Thursday, September 26, 2013

பாஜகவின் இளைஞர் அணி சார்பில் நடைபெறும் இளந்தாமரை மாநாடு திருச்சியில் ஜி. கார்னர் மைதானத்தில் வியாழக்கிழமை மாலை துவங்கியது. மாநாட்டில், பாஜக இளைஞர் அணி செயலர் அனுராக் தாக்கூர்  துவக்க உரை ஆற்றினார்.

அவரது உரையைத் தொடர்ந்து பாஜக மாநில நிர்வாகிகள் உரையாற்றி வருகின்றனர்.

தொடக்கத்தில் இன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பலியான நமது ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு நிமிடம் உட்கார்ந்த இடத்தில் உட்கார்ந்த படியே மௌனம் அனுஷ்டிக்கக் கோரினார் மோதி.  பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்,  அலைபாயும், கூச்சல் போடும் கூட்டத்தை அமைதிப் படுத்தி தன் நிலைக்குக் கொண்டு வந்து பேச்சில் கவனம் குவிக்கவும் இது உதவியது. பேசப் போகிற விஷயம் கைதட்டலுக்கானது மட்டுமல்ல, கவனத்திற்கானது என்று அறிவிப்பது போலிருந்தது இது.

"தாய்மார்களே பெரியோர்களே என்று தமிழில் தனது பேச்சைத் தொடங்கினார் மோடி. வாலி சிங்கங்களே என்றார் மோடி. வாலிப என்று திருத்திக் கொடுத்தார் ராஜா.

"தமிழ்நாடு பெருமை உடைய நாடு. கம்பன் வள்ளுவர் பிறந்த பூமி. தமிழ்நாடு என்று சொன்னால், காதில் தேன் வந்து பாயும் என்று பாடினார் பாரதியார். திருச்சி தமிழ்நாட்டின் இதயம் போல் மத்தியில் இருக்கும் மாவட்டம். மலைக்கோட்டையும் காவிரியும் அலங்கரிக்கும் மாவட்டம் சோழர் தலைநகராக உறையூர் இருந்தது திருச்சி. இந்த நகரில் வசிக்கும் மற்றும் இங்கு வந்துள்ளவர்கள் அனைவருக்கும் மீண்டும் வணக்கம் என்றார் தமிழிலேயே பேசத் தொடங்கிய மோடி.

"ராமலிங்கம் பிள்ளை சொல்லியிருக்கிறார்... தமிழர் என்றோர் இனம் உண்டு. தனியே அவர்க்கோர் குணம் உண்டு என்றார்.. தமிழகத்தில் உரையாற்றுவதில் நான் பெருமை கொள்கிறேன்; தமிழர்கள் கடின உழைப்பாளிகள், புத்திசாலிகள், மற்றவரை மதிப்பவர்கள் என்றெல்லாம் கூறினார்.

”கம்பனும் வள்ளுவனும் பாரதியும் பிறந்த தமிழ் மண்ணிற்கு வருகை தருவதை மதிப்புக்குரிய விஷயமாகக் கருதுகிறேன். தமிழ் மக்களிடம் மூன்று நல்ல குணங்கள் உண்டு – கடும் உழைப்பு, சிரத்தை, ராஜகம்பீரம் & விசுவாசம். தமிழகத்தின் பொருட்கள் தேசிய, உலக சந்தைகளில் தரம் வாய்ந்தவையாக உள்ளன. தமிழ் மக்களின் உழைப்பினால் தமிழ்நாடு இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது, தமிழ் மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்த மொழி” – இவ்வாறு தமிழ்ப் பண்பாட்டுக்கும் மக்களுக்கும் புகழாரம் சூட்டித் தனது உரையைத் தொடங்கினார்.

அடுத்து, குஜராத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள உறவுகளை, ஒற்றுமைகளைப் பட்டியலிட்டார். ”இரண்டும் கடற்கரைகள் கொண்ட மாநிலங்கள். பருத்தியை அதிகமாக விளைவிக்கிறது குஜராத், அதைப் பெருமளவு நுகர்ந்து ஆடையாக நெய்கிறது தமிழகம். குஜராத் காந்தியின் மனசாட்சியாக தமிழகத்தின் ராஜாஜி இருந்தார்.

 தமிழ் மக்கள் குஜராத்திற்குப் புலம்பெயர்ந்து அதன் வளர்ச்சிக்கு உதவுவது போலவே, சௌராஷ்டிரர்களான குஜராத்திகள் தமிழ்நாட்டில் பல காலமாக இருக்கிறார்கள்.  பாலில் சர்க்கரை கலந்தது போன்ற இனிய உறவு அது. இங்கு சென்னையில் குஜராத்திகள் அதிகமாக வசிக்கும் சௌகார்பேட்டை போல குஜராத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மணிநகர். எனது சட்டசபைத் தொகுதி அது. அங்குள்ள தமிழர்கள் தான் தொடர்ந்து வாக்களித்து என்னைத் தேர்ந்தெடுத்து வருகிறார்கள்” என்று  நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இது ஒரு சாதாரண அரசியல்வாதி பேசும் பேச்சல்ல. இந்த தேசத்தின் மீது, மண்ணின் மீது, காலகாலமாக இருந்து வரும் அதன் சமூக, கலாசார பந்தங்களின் மீது ஆழமான பிடிப்பும், அன்பும் கொண்ட ஒருவரின் பேச்சு. எண்ணமும், செயலும் எல்லாம் இந்த தேசத்தை ஒற்றுமைப் படுத்துவதற்காகவே, இந்த தேசமக்களின் நல்வாழ்விற்காகவே இயங்கும் ஒரு தேசபக்தனின் பேச்சு. எத்தனை உரை எழுத்தாளர்களை வைத்துக் கொண்டாலும் காங்கிரசின் முட்டாள் இளவரனிடம் இருந்தோ, அல்லது மற்ற  சுயநல அரசியல்வியாதிகளின் வாயிலிருந்தோ இப்படி ஒரு பேச்சு சுட்டுப் போட்டாலும் வராது.

குஜராத்தின் மீனவர்களை பாகிஸ்தான் பிடித்துச் சென்று சித்ரவதை செய்வதையும், தமிழக மீனவர்களை இலங்கை அதே போன்று செய்வதையும் குறித்து அடுத்துப் பேசினார்.. இந்த நாடுகள் இப்படித் துளிர்த்துப் போய் விட்டதற்கு இடையே உள்ள கடல் நீர் காரணமல்ல,  தில்லியில் உள்ள பலவீனமான அரசும் அதன் கொள்கைகளுமே காரணம்.  இலங்கை அரசு தமிழக மீனவர்களைக் கொல்கிறது. பாகிஸ்தானிய ராணுவம் நமது ராணுவ வீரர்களைக் கொல்கிறது.. பயங்கரவாதம் அபபவியான பொதுமக்களைக் கொல்கிறது, பூடான், இலங்கை, நேபாளம் போன்ற சிறிய நாடுகள் கூட இந்தியாவை மதிப்பதில்லை. இதற்கெல்லாம் காரணமான அந்த பலவீனமான அரசை அகற்ற வேண்டும் – என்று முழங்கினார்.

அமெரிக்கா தனது மண்ணில் அநியாயமாக உளவறிந்து வருவதை அறிந்து, அந்த நாட்டுடனான ராஜரீக தொடர்புகள் அனைத்தையும் பிரேசில் துண்டிக்கிறது. தனது நாட்டின் தேசதுரோகியான ஸ்னோடன் என்பவருக்கு ரஷ்யா அடைக்கலம் கொடுத்ததால், தனது ரஷ்யப் பயணத்தையே அமெரிக்க அதிபர் ஒபாமா ரத்து செய்தார். இதிலிருந்து நாம் என்ன பாடம் கற்றோம்? நமது பிரதமரோ பயங்கரச் செயல்கள் நடந்து கொண்டிருக்கும் போதும் கூட தொடர்ந்து பாகிஸ்தானிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார், அதன் அரசியல் தலைவர்களூடன் உட்கார்ந்து சிக்கன் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்..  இந்த செயலை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? என்று கூட்டத்தைப் பார்த்து கேட்டார்.  இல்லை என்று பெரும் எதிரொலி வந்தது.

அடுத்து, காங்கிரஸ் அரசு ஏற்படுத்தியுள்ள பொருளாதார சீரழிவு குறித்து பேசினார்.

“இதே நிலை நீடித்தால் இன்னும் 5 ஆண்டுகள் நீடித்தால் இப்போது நல்ல வேலையில் இருக்கும் இளைஞர்கள் சாலையோரங்களில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப் படுவார்கள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவதை சுட்டிக்  காட்டினார். ”அரசின் தவறான கொள்கைகளால் தொழில்கள் அழிகின்றன.  பெரும் வணிக முதலைகளுக்கு உதவும் அரசு, சிறிய தொழில் முனைவர்கள் வாங்கிய கடனைத் திருப்பித் தர முடியாமல் போனால் அவர்களது பெயர்களை செய்தித் தாளில் விள்ம்பரப் படுத்தி அவர்களை அவமதித்து தற்கொலை வரை கொண்டு தள்ளுகிறது.  இந்தக் கொள்கைகள் மாற்றப்பட்டு  லட்சக்கணக்கான கோடிக்கணக்கான சிறீய தொழில்கள் வளர்க்கப் பட்டு அதன் மூலம் நமது இளைஞர்கள் மதிப்புக்குரிய வேலைவாய்ப்புகளைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் வகையில் எங்களது அரசின் திட்டங்கள் இருக்கும்.

ஊழல் நமது பொதுவாழ்வை அழிக்கிறது. ஏழை மக்களைச் சென்று சேர வேண்டிய பணம் ஊழலில் வீணாகிறது. ஆதார் அட்டை என்ற திட்டம் குறித்த ஐயங்களை மூன்று வருடம் முன்பே நான் தெரிவித்தேன், அதே விஷயங்களை இப்போது உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்கிறது.  பண விரயம் மட்டுமல்ல, நாட்டின் பாதுகாப்பையே கேள்விக் குறியாக்கும் வகையில் இந்த ஆதார் அட்டை முறைகேடுகள் உள்ளன.

காங்கிரசின் அரசியல் எப்போதும் மக்களைப் பிளப்பதாக, பிரிப்பதாக இருக்கீறது. சாதி, மதம், கிராம – நகர வேறுபாடு என்று பல முனைகளில் தொடர்ந்து மக்களைப் பிரித்தாளும் கொள்கைகளை காங்கிரஸ் செயல்படுத்தி வருகீறது.  காங்கிரசைக் கலைக்க வேண்டும் என்று அன்று காந்தி சொன்னதை உண்மையாக்கும் வகையில் நாம் தேசத்திற்கு காங்கிரசிடமிருந்து விடுதலை அளிக்க வேண்டும்” என்றார்.

”இந்த மைதானம் நிறைந்து, அதற்குப் பின்னுள்ள பாலத்தைத் தாண்டியுள்ள மைதானமும் நிறையும் அளவுக்கு இளைஞர்களின் கூட்டம் இங்கு கூடியுள்ளது. அந்த இளைஞர்களை என்னால் பார்க்க முடியவில்லை.. மைதானம் சிறியது, அதில் இடமில்லாமல் போகலாம்., ஆனால் என் இதயத்தில் எப்போதும் உங்கள் அனைவருக்கும் இடம் உண்டு.

தமிழக அரசியலையும் தேசிய அரசியலையும் அறிந்தவர்கள் இளைஞர்களின் இந்தக் கூட்டத்தைப் பார்த்தே இங்கு எவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கீறது என்பதைக் காண முடியும், பல முறை தமிழ் நாட்டுக்கு வந்திருக்கிறேன்,. இது போன்ற ஒரு இளைஞர் பெருந்திரளை இது வரை கண்டதில்லை, இங்கு வந்த அனைவருக்கும், ஏற்பாடு செய்த இளைஞர் அணியினருக்கும் மிக மிக நன்றி.

நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள், அந்த நம்பிக்கையை ஒருபோதும் உடைக்க மாட்டோம் என்று உறுதியளிக்கிறேன். எங்களது சக்தி அனைத்தையும் உங்களது முன்னேற்றத்திற்காக, நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவோம். நீங்கள் எனக்கும் பாஜகவுக்கும் புதிய நம்பிக்கையையும் வலிமை உணர்வையும் ஏற்படுத்தியுள்ளீர்கள். வந்தே மாதரம்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

இறுதியில் அனைவரும் முஷ்டிகளை உயர்த்தி வந்தே மாதரம் என்று முழங்கச் செய்தது சிலிர்ப்பூட்டுவதாக இருந்தது.

சிறப்பான நிகழ்ச்சி.  அருமையான உரை. தனிப்பட்ட அளவில், மோதி இன்னும் சில விஷயங்களையும் பேசியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. சேலம் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப் பட்டது குறித்து கட்டாயம் பேசப்பட்டிருக்க வேண்டும். பொன். ராதாகிருஷ்ணன் இலேசாக தன் பேச்சில் இதைச் சுட்டிக் காட்டினார்,

தமிழகத்தின் மின்சாரத் தட்டுப்பாடு,   இலங்கையில் தேர்தல் முடிந்த நிலையில் தமிழர்கள் மறுவாழ்வு குறித்த எதிர்பார்ப்புகள் ஆகிய விஷயங்கள் குறித்து ராஜ்நாத் சிங் பேசினார். அது போதாது. மோடியும் இந்த விஷயங்களைப் பேசியிருக்க வேண்டும்.

மொத்தத்தில் இது ஒரு மிக வெற்றிகரமான நிகழ்வு. மோடியின் திருச்சி விஜயம் கட்டாயம் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும், மோடி பிரதமராகப் போகும் வரலாற்றுத் தருணத்தில் தமிழகமும் தனக்குரிய பங்களிப்பை நல்கும் என்றும் நம்புவோம்.

திரு. நரேந்திர மோடி திருச்சியில் உரையாற்றி முடித்து விட்டார். சம்பிரதாயமாக தமிழில் ஆரம்பித்து, பிறகு ஹிந்தியில் மிக உணர்ச்சிகரமாக பேசினார். நடுவில் சில பகுதிகள் மட்டும் ஆங்கிலத்தில் இருந்தன. இயல்பாகவே மிகச் சிறந்த பேச்சாளர் மோடி. இந்த உரையும் அதற்கு விதிவிலக்கல்ல. தமிழக பாஜக தலைவர் ஹெச்.ராஜா நன்றாகவே மொழியாக்கம் செய்தார். ஆனால் மோடியின் குரலில் இருந்த உணர்ச்சிகள், ஏற்ற இறக்கங்கள் ஆகியவை ராஜாவின் மென்குரல் பேச்சில் கொஞ்சம் நீர்த்து விட்டன என்று தான் சொல்ல வேண்டும்.
Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.