News Update :

உலக யூத் கேம்ஸ் தங்கம் வென்றார் வெங்கட்

Thursday, August 22, 2013

நான்ஜிங்: ஆசிய "யூத்' விளையாட்டு, பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் வெங்கட் ராகுல் (77 கி.கி.,) தங்கம் வென்றார். ஆண்களுக்கான "ஏர் பிஸ்டல்' போட்டியில் இந்தியாவின் ஷைனிக் நாகார் வெள்ளி பதக்கம் வென்றார்.
சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில், 2வது ஆசிய "யூத்' விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. இதன் ஆண்களுக்கான 77 கி.கி., எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில், மொத்தம் 310 கிலோ (ஸ்னாட்ச்-142 கிலோ + கிளீன் அண்ட் ஜெர்க்-168 கிலோ) பளு தூக்கிய இந்தியாவின் வெங்கட் ராகுல், 16, முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். வெள்ளி, வெண்கல பதக்கத்தை முறையே சீனாவின் ஜிங்யு லூ (285 கிலோ), தாய்லாந்தின் பிசெட் மனீஸ்ரீ (280 கிலோ) ஆகியோர் கைப்பற்றினர்.
துப்பாக்கி சுடுதல்:
ஆண்களுக்கான 10 மீ., "ஏர் பிஸ்டல்' போட்டியில், 195.3 புள்ளிகள் பெற்ற இந்தியாவின் ஷைனிக் நாகார், இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி வென்றார். சீனாவின் ஊ ஜியாயு (195.5 புள்ளி) முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். உஸ்பெகிஸ்தானின் ரிபாத் கிர்பனோவ் (174.7 புள்ளி) வெண்கலம் கைப்பற்றினார். இப்போட்டியில் பைனலுக்கு முன்னேறிய மற்றொரு இந்திய வீரர் சமர்ஜித் சிங், 134 புள்ளிகள் மட்டும் பெற்று 5வது இடம் பிடித்தார்.
எட்டு பதக்கம்:
இதன்மூலம் இத்தொடரில் இதுவரை இந்தியாவுக்கு எட்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. முன்னதாக இந்தியாவின் குஷ் குமார் (ஆண்கள் ஸ்குவாஷ், தங்கம்), மானு கந்தாஸ் (ஆண்கள் கோல்ப், வெள்ளி), கவிதா தேவி (பெண்கள் ஜூடோ, வெண்கலம்), லால்ச்சன்ஹிமா (ஆண்கள் பளுதூக்குதல், வெண்கலம்), அபிஷேக் யாதவ் (ஆண்கள் டேபிள் டென்னிஸ், வெண்கலம்), சரோஜ் அஜய் குமார் (ஆண்கள் 1500 மீ., ஓட்டம், வெண்கலம்) ஆகியோர் பதக்கம் வென்றனர்.
ஆசிய ஸ்குவாஷ்
இதன் ஆண்கள் அணிகளுக்கான ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி முதலில் சீனாவை எதிர்கொண்டது. இதில் குஷ் குமார், விஜய் மீனா, யோகேஷ் மாதவ் ஆகியோர் அசத்த இந்திய அணி 3-0 என வென்றது.
தொடர்ந்து சில மணிநேர இடைவெளியில் நடந்த மற்றொரு போட்டியில், இந்திய அணி, கொரியாவை 3-0 என வீழ்த்தியது.
பெண்கள் பிரிவில் தனிவ் கானா, ஹர்ஷித் ஜவான்டா, அத்யா ஆகியோர் அசத்த, இந்திய அணி 3-0 என இந்தோனேஷியாவை வீழ்த்தியது.
தொடரும் வெளியேற்றம்
ஆசிய "யூத்' விளையாட்டு போட்டியில் இருந்து, வயது பிரச்னை காரணமாக, நேற்று இந்திய பளூதூக்குதல் வீராங்கனை மன்பிரீத் கவுர் வெளியேற்றப்பட்டார். இத்தொடரில் 16 வயதுக்குட்பட்டவர்கள் தான் பங்கேற்க முடியும். ஆனால், இந்தியா சார்பில் அனுப்பப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்த வயதை தாண்டியவர்களாக உள்ளனர். இதனால், பலர் திருப்பி அனுப்பபடுகின்றனர். இதுவரை, இந்தியா சார்பில் 25 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.