News Update :

அடித்து வளர்க்காதீர்கள் -1

Friday, August 30, 2013

ஒரு வருடத்திற்குத் திருட்டுத்தொழில் செய்ய 50 ஆயிரத்திற்கு பெற்ற மகனை விற்ற செய்தி (தினத்தந்தி 27-10-05) எதை வெளிப்படுத்துகிறது.? குழந்தை தனது சொத்து என்ற அடிப்படையில் நடந்த இந்த நிகழ்வு வன்முறையில்லையா?.

குழந்தைகளை ஆசையோடும் அன்போடும் அரவணைத்து வளர்ப்பவர்கள் பெற்றோர்கள் என்பதுதான் நம் பொதுவான கருத்து. ஆனால் பெற்ற பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு நடக்கும் நிகழ்வுகள் ஏராளம். இவைகளை வன்முறை என்று சொல்லலமா? கூடாதா?

குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 6 முதல் 7 லட்சம் சிறுமிகள் என்கிறது யுனிசெஃப் அமைப்பு. இவை வன்முறைதானா? இல்லையா?
ஆக, குழந்தைகளுக்கு அங்கிங்கெணாதபடி எல்ல இடங்களிலும் வன்முறைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதன் அடிப்படையான காணத்தைத் தோன்டும் போதுதான் சங்கிலித்தொடர் போன்று சமூகப் பிரச்சனையாகவும், அரசியல் பிரச்சனையாகவும் வடிவமெடுக்கின்றன.

பாரபட்சமான, ஏற்றத்தாழ்வான சாதிய அடுக்குமுறைகளும் இதற்குக் காரணமாகின்றன என்று புலப்படுகிறது. இவற்றைக் களைய வேண்டும் என்றால் பல கட்டங்களில் நம் போராட்டம் தொடரவேண்டும்.
ஒட்டு மொத்தமாக குடும்பத்தில் உள்ள வன்முறைகளை சொல்கிறீர்கள்? ஆனால் எங்கள் வீட்டில் அவ்வாறு நடப்பதில்லை…
எவ்வளவு ஆழமாக நம்புகிறீர்கள். பெரியவர்கள் வீடுகளில் சண்டை போடுவது கூட குழந்தைகளின் மனநிலையை மிக ஆழமாக பாதிக்கிறது.

நான் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஒரு குழந்தையிடம் படம் வரையச்சொன்னேன். தன் அப்பாவும் அம்மாவும் சண்டையிடுவதால் தனக்குப் படிப்பும் வரவில்லை, இருக்கவும் பிடிக்கவில்லை என்று குழந்தை சொல்வதான கார்ட்டூன் அது. அந்தக் குழந்தையிடம் பேசிக் கொண்டிருந்த போது எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளாள் என்று தெரிந்தது.
“யார் யாரோடு சண்டை போட்டாலும் கடைசியில் பாதிக்கப்படுவது நான் தான். எனக்குத்தான் அடி கிடைக்கும். திட்டு கிடைக்கும். அப்போதெல்லாம் நான் அழுவேன். அழுதால் அதற்கும் அடி கிடைக்கும். அதனால் கஷ்டப்பட்டு அடங்குவேன்.

தொண்டையெல்லாம் அமுக்கி வலிப்பது போல இருக்கும். நெஞ்சுவலிக்கும். நிற்க வைத்து ஜெயிலுக்குள் இருப்பவர்கள் கிட்ட கேள்வி கேட்பது போல் கேட்பார்கள். நிறைய தடவை நினைப்பேன். சுனாமி வந்தப்ப இவங்க செத்து போயிருக்க கூடாதா?… என்று. அப்புறம் உடனே சாமிகிட்ட மன்னிப்பும் கேட்பேன். நான் அவங்க கிட்ட அடியும் உதையும் வாங்கறப்ப எல்லாம் எங்கயாவது ஓடிப்போலாம் போல இருக்கும்.

அப்படி போனா பொம்பளைப் பிள்ளங்கள யாரோ பிடிச்சுக்கிட்டு போயிருவாங்கன்னு எங்க பக்கத்து வீட்டு பெரியம்மா சொல்லும். நான் எங்கப்பாரு அடிக்கும் போதெல்லாம் கெஞ்சுவேன். என் சத்தம் எதையும் காதில வாங்க மாட்டாங்க. எனக்கு எங்கம்மாவும் அப்பாவும் அன்பு செய்ய மாட்டாங்களான்னு இருக்கும். பக்கத்துல உட்கார்ந்து பேசமாட்டாங் களான்னு இருக்கும். அவங்க மடியில் படுத்து கத்தணும் போல இருக்கும். கோபமா இருக்கும்போது அவங்களைப் பாத்தாலே எனக்கு பயம். இதனால சரியாவே படிக்க முடியலை. பள்ளிக் கூடத்திலே டீச்சரும் படிக்காட்டி அடிப்பாங்க. எங்கம்மாவும், எங்கப்பாவும் கையில அடிச்சாங்கன்னா எங்க டீச்சர் குச்சியில அடிப்பாங்க. எல்லா பிள்ளைகளும் சிரிக்கும். சிரிக்கிறப்ப செத்து போகலாம்னு இருக்கும். ஏன் பொறந்தோம்னு இருக்கு. நான் யாருக்கும் பிரயோசனமில்லை. ஒண்ணு சுனாமில நா செத்திருக்கணும்” என்று கேவிக்கேவி அழுதாள் அந்தக் குழந்தை.

மனசே தாங்கவில்லை. இப்படிப்பட்ட சின்னச்சின்ன விசயங்கள் கூட அந்தக் குழந்தைகளை எப்படிப் பாதிக்கிறது. ஒரு வார்த்தையைக் கூட தாங்க முடியாத அளவு அவ்வளவு மெல்லியதா இவர்கள் உள்ளம்? பூ என்று சொல்வார்களே, அதைப்போன்றதா? எங்களின் சொல்லும் செயலும் உங்களை அவ்வளவாகவா பாதிக்கிறது? எங்களின் நடவடிக்கை உங்களை உட்சுருக்கி சுக்குநூறாக நொறுக்கி விடுகிறதா? என் போன்றோர் திருந்தாத வரையில் ஒட்டுமொத்த பெற்றோர்கள் சார்பாக உங்களிடம் மன்னிப்பு மட்டும் தான் கேட்கமுடிகிறது என்னால். ஆனால் இதை வாசிக்கும் ஒவ்வொரு நபரும் கண்டிப்பாகத் திருந்துவார்கள். எனக்கு நம்பிக்கையிருக்கிறது.
யார் குழந்தைகளின் சுதந்திரத்தை யோசிக்கப்போகிறார்கள்?

Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.