News Update :

மலிவு விலையில் பாதுகாப்பான குடிநீர்

Saturday, September 14, 2013

நாளை முதல் அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் அரசுப் பேருந்துகளிலும் மலிவு விலையில் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

அத்தியாவசியப் பொருள்களின் விலை அநியாயத்துக்கு உயர்ந்து வருவதால், அவற்றை மலிவு விலையில் அரசு சார்பில் மக்களுக்கு வழங்கும் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறார்.

ஏழை எளிய மக்கள் பயன்பெறுவதற்காக விலையில்லா அரிசி, நியாய விலை கடைகளில் குறைந்த விலையில் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவை வழங்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மலிவு விலை காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏழைகளும், கூலித் தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் அனைத்து மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு இட்லி, பொங்கல், தயிர் சாதம், சப்பாத்தி உள்பட பல்வேறு உணவு வகைகள் மிகவும் குறைந்த விலைக்கு வழங்கப்படுகின்றன.

இதுபோன்று ஏழை, எளிய மற்றும் பொது மக்களின் நலன் கருதி அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் ‘அம்மா குடிநீர்’ உற்பத்தி நிலையங்களை அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.

குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் மினரல் வாட்டர் தயாரிக்கும் குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர் ‘அம்மா குடிநீர்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 1 லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பப்பட்டு நீண்டதூரம் செல்லும் அரசு பேருந்துகளில் விற்பனை செய்யப்படும். சென்னையில் உள்ள பேருந்து நிலையங்கள், மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலும் இந்த குடிநீர் விற்பனைக்குக் கிடைக்கும்.

ரெயில்வே நிர்வாகம் 1 லிட்டர் குடிநீர் பாட்டில்களை ரூ.15-க்கும், தனியார் நிறுவனங்கள் ரூ.20-க்கும் விற்பனை செய்கின்றன. ஆனால் ‘அம்மா குடிநீர்’ 1 லிட்டர் பாட்டில் 10 ரூபாய்க்கே விற்பனை செய்யப்பட உள்ளது.

முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்தப்படி ‘அம்மா குடிநீர்’ விற்பனை அண்ணா பிறந்த நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதன் தொடக்க விழா காலை 11.15 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சாலை போக்குவரத்து நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘அம்மா குடிநீர்’ உற்பத்தி நிலையத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமை செயலாளர் ஷீலாபால கிருஷ்ணன், போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் பிரஜ்கிஷோர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.



Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.