News Update :

வேண்டாம் சிக்கன் 65...!

Thursday, September 19, 2013

முகேஷுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போனது. காரணம் ராகவனிடம் மது, புகை என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பிறகு எப்படி கேன்சர்? தலையைப் பிய்த்துக்கொண்ட மருத்துவர்கள் கடைசியாக அவரது உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்தது.

அசைவப்பிரியரான ராகவன் தினமும் சாப்பாட்டில் சிக்கன் 65 இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். அதுவும் செக்கச் சிவந்த நிலையில் மொறு மொறுவென்று இருக்கும் சிக்கன் 65ஐத்தான் விரும்பிச் சாப்பிடுவாராம். அதுதான் அவரது கேன்சருக்குக் காரணமாம். எப்படி? பளிச்சென்று தூக்கலாகத் தெரிவதற்காக சிக்கனுடன் சேர்க்கப்படும் அந்த சிவப்பு நிற கெமிக்கல் பவுடர்தான் அந்த கேன்சருக்கு முழுக்காரணம்.

இந்த கெமிக்கல் கலந்த சிக்கன் 65 சாப்பிடுவதால் வயிற்றில் கேன்சர், சிறுநீரகக் கோளாறு. மரபணுக்களில் பாதிப்பு போன்ற நோய்கள் உண்டாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.உணவுப் பொருட்களில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள் பற்றியும், பயன்படுத்தக்கூடாத நிறங்கள் பற்றியும் நெல்லை மாநகராட்சியின் உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் பேசும்போது.

உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்களும் குறிப்பிட்ட அளவு. அதாவது 10 கிலோ உணவுப் பொருளுக்கு 1 கிராம் மட்டுமே சேர்க்க அனுமதி. ஆனால் இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்குக் கேடுதான். எடுத்துக்காட்டாக, உணவில் சிவப்பு நிறம் கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் (goItre) வரும். இந்த செயற்கை நிறங்களும் இனிப்பு வகைகளில் மட்டுமே சேர்க்க அனுமதி. கார வகையான உணவுகளில் சேர்க்க அனுமதி கிடையாது.

பொன்சியூ4.ஆர்., எரித்ரோசின் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியண்ட் புளூ, இண்டிகோ கார்மைன் பயன்படுத்தினால் ஊதா கலர் கிடைக்கும். இந்த மாதிரியாக கிடைக்கக் கூடிய எட்டு வகையான கலர்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி.

கார வகையான உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களை கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது. ஆனால் நமது மக்களின் மனதில் உணவைவிட உணவின் கலர்தான் பளிச்சென்று பதிந்து இருக்கிறது. சிக்கன் 65 என்றால் சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சிக்கன் 65 என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் மனதிற்கேற்ப வியாபாரிகளும் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர்.

சிக்கன் 65-ல் செயற்கை வண்ணங்களைச் சேர்ப்பதே தவறு. அதிலும் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை அளவுக்கு அதிகமாக சேர்க்கின்றனர். எடுத்துக்காட்டாக சூடான் டை, மெட்டானில் எல்லோ கெமிக்கல்களைச் சேர்த்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள். இன்று இதனை சிக்கன் 65யுடன் சேர்த்து விடுகின்றனர். இப்படி சேர்ப்பதால் சிக்கன் 65 ரெட் கலரில் பளிச்சென்று தூக்கலாகத் தெரியும். இதைச் சாப்பிடுவதால் குடல்கேன்சர், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்களில் கோளாறு என கொடிய நோய்களை உண்டாக்கி விடுகிறது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம்.இப்படி உணவுப் பொருளில் கலப்படம் செய்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உணவு தடைச்சட்டத்தின் பிடியிலிருந்தும் ஈஸியாகத் தப்பி விடுகின்றனர்.

உணவுக் கலப்பட வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் காந்திமதிநாதன் கூறும்போது: ஃபுட்கலர்ஸ் விற்பவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அந்த ஃபுட்கலர்ஸ் உணவுப் பொருட்களில் கலந்து உணவுப் பொருட்களுக்கு நிறத்தைக் கொடுத்த பின்புதான் அது குற்றமாகிறது. கலப்பட உணவுப் பொருட்களின் மீது வழக்குத் தொடரவேண்டுமானால் முதலில் தயாரித்து வைத்த உணவுப் பொருட்களை மூன்று பாகங்களாக சாம்பிள் எடுக்க வேண்டும். முதல் பாகத்தை உடனடியாக கெமிக்கல் லேபுக்கு அனுப்பி கலப்படத்தை உறுதி செய்து, ரிப்போர்ட் வாங்கி அந்த அடிப்படையில் வியாபாரியின் மீது வழக்குத் தொடரவேண்டும். மீதமுள்ள இரண்டு பாகமும் சுகாதார அதிகாரியின் கட்டுப்பாட்டில் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது சுகாதார அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள உணவுப் பொருளின் இரண்டு பாகங்களை நீதிமன்றம் மூலம் மத்திய பகுப்பாய்வுக் கூடத்திடம் ரிசல்ட் கேட்கவேண்டும். அந்தச் சூழ்நிலையில் கண்டிப்பாக உணவுப் பொருள் கெட்டுப்போய்த்தான் இருக்கும். மத்திய பகுப்பாய்வுக் கூடத்தால் சரியான ரிசல்ட்டை கொடுக்க முடியாது. இதனால் வழக்கு நிற்காமல் அடிபட்டு விடும்.

எடுத்துக்காட்டாக சூடான்டையால் நிறம் ஊட்டப்பட்ட சிக்கன் 65ஐ சாம்பிள் எடுத்து கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற கெமிக்கலை சிக்கன்-65 மீது ஊற்றி வைப்பார்கள். அந்த கெமிக்கல் சிக்கன் 65யின் முழுப்பகுதியையும் அடைய வாய்ப்புக் குறைவு. அப்படி கெமிக்கல் படாத இடம் முதலில் கெட்டுப்போய் மொத்த சிக்கன் 65ஐயும் கெட்டுப்போகச் செய்து விடுகிறது. அதனால் அதிலிருந்து சரியான ரிசல்ட் எடுக்க முடியாமல் போய் விடுகிறது.உணவுக் கலப்பட சட்டத்தைப் பொறுத்தமட்டில் வியாபாரிகளுக்கும், சில பங்களிப்பு இருப்பதால் வியாபாரிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்” என்கிறார். அதனால் தேவையற்ற கெமிக்கல் கலர் பொடிகள் சேர்த்த சிக்கன்களைத் தவிர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு?

கேன்சர் ஆபத்து!

இது குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் சதீஷிடம் கேட்டபோது: “சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும். நீண்ட நாட்கள் அதைச் சாப்பிட்டு வந்தால் பெருங்குடலில் கேன்சர், சிறுநீரகப் பாதிப்பு உண்டாகும். தொடர்ந்து சிறுநீரகத்திலிருந்து ரசாயன நச்சுப் பொருட்கள் ரத்தத்தோடு கலந்து சிறுநீர்ப் பைக்கும் செல்லும். அங்கே ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப் பையில் புற்றுநோய் வரும் ஆபத்து உண்டு. கழுத்தில் கழலை, மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது’ என்று எச்சரிக்கிறார்.



Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.