News Update :

சீனாவில் விமான நிலையம் திறப்பு

Thursday, September 19, 2013

சீனாவின் கட்டுப்பாட்டில் திபெத் உள்ளது. தன்னாட்சி அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள திபெத்தில் உலகின் மிக உயரமான இடத்தில் சீனா புதிதாக விமான நிலையம் கட்டியுள்ளது.

திபெத்தில் 4,334 மீட்டர் உயரத்தில் இருக்கும் பாங்டா விமான நிலையமே உயரமான இடத்திலிருந்து செயல்படும் விமான நிலையம் என்ற பெருமையை இதுவரை பெற்றிருந்தது. தற்போது சுற்றுலாத்துறையை விஸ்தரிக்கும் வண்ணமும், நாட்டின் மேற்குப் பகுதியில் நடைபெறும் அரசியல் அமைதியின்மையைக் கண்காணிக்கவும் 4,411 மீட்டர் உயரத்தில் புதிய விமான நிலையம் ஒன்றினை சீனா அமைத்துள்ளது. டயோசெங் யாடிங் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையம், உயரமான இடத்தில் அமைந்துள்ள முதல் சிவிலியன் விமான நிலையம் என்ற பெருமையைப் பெறுகின்றது.

இத்தகைய உயரத்தில் விமானத்தின் உந்துசக்தி குறைவாக இருக்கும் என்பதால் நீளமான ஓடுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள 4,200 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதை நியூயார்க்கின் ஜான் எப் கென்னடியில் உள்ளதைவிட 242 மீட்டர்தான் குறைவாக உள்ளது. பயணிகளுக்கும்கூட காற்றழுத்தக் குறைவினால் வரும் நோய்கள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் இந்த புதிய விமான நிலையத்திலிருந்து பயண சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. பொதுவாக இங்கிருந்து பேருந்து மூலம் சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டுவிற்குச் செல்ல இரண்டு நாட்கள் பிடிக்கும். இந்த விமானப் பயணம் அதனை 65 நிமிடங்களாக குறைக்கின்றது. இந்த மாத இறுதிக்குள் மற்ற சேவைகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திபெத்தின் நுழைவாயிலாக விளங்கும் இந்தப் பகுதியின் கீழ் வாழும் திபெத்திய மக்களின் மத்தியில் உள்ள எதிர்ப்பைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சியை நிலைப்படுத்தி ஒரு சுற்றுலாப் பகுதியாக இந்த இடத்தை மேம்படுத்த சீனா முயன்று வருகின்றது.

ஏற்கனவே இங்கு காங்கர், லாஷா, பாஸ்டா, ஸிகாஷ் மற்றும் நகாளி ஆகிய 5 இடங்களில் சீனா விமான நிலையம் கட்டியுள்ளது. தற்போது 6–வதாக சிசுவான் மாகாணத்தில் டயோ செங் யாடிங் என்ற இடத்தில் விமான நிலையம் கட்டியுள்ளது.

இந்திய எல்லையொட்டிய திபெத் பகுதியில் சீனா ரெயில், ரோடு மற்றும் விமான வசதி செய்து வருகிறது. இதன் மூலம் இந்திய எல்லை பகுதியை சீனா சுலபமாக வந்தடைய முடியும்.

சீனாவின் இந்த நடவடிக்கைகள் இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.




Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.