News Update :

'சூர்யா' இந்திய ஏவுகணை

Tuesday, September 17, 2013

10 ஆயிரம் கி.மீ. பாய்ந்து சென்று தாக்கவல்ல ஏவுகணையை இந்தியாவால் தயாரிக்க முடியும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) தலைவர் கூறினார்.

இந்தியா நேற்று முன்தினம் அக்னி–5 பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து பார்த்தது. இது, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகும். இந்த ஏவுகணையின் சிறப்பம்சங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் அவினாஷ் சந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, "அக்னி–5 ஏவுகணை, 5 ஆயிரம் கி.மீ. பாய்ந்து செல்லக்கூடியது. அது ஒட்டுமொத்த சீனாவையும் தாண்டி ஐரோப்பா வரை சென்று தாக்கக்கூடியது. அந்த ஏவுகணை இன்னும் 4 தடவை சோதித்து பார்க்கப்பட்ட பிறகு, இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படும். அதாவது, 2 ஆண்டுகள் கழித்து சேர்க்கப்படும். அதுபோல், இந்தியாவால் 10 ஆயிரம் கி.மீ. பாய்ந்து சென்று தாக்கவல்ல ஏவுகணைகளை கூட தயாரிக்க முடியும். முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். அரிஹந்த் என்ற அணுசக்தி நீர்மூழ்கி கப்பல், இந்திய கடற்படையில் சேர்க்கப்படும். அதற்காக, இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ அக்கப்பலை வைத்து ஆயுத பரிசோதனை நடத்தப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.

அக்னி-5 ஒரே ஒரு அணு அல்லது வேறு குண்டை ஏந்திச் செல்ல வல்லது. அடுத்தகட்டமாக ஒரே ஏவுகணையில் பல குண்டுகளை ஏந்திச் செல்லும் தொழில்நுட்பத்தை (Multiple independently targetable reentry vehicle-MIRVed) இந்தியா உருவாக்கி வருவதாகத் தெரிகிறது.

‘A6′ என்று கோட் நேம் இடப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஏவுகணையின் தூரமும் 6,000 முதல் 10,000 கி.மீற்றராக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஏவுகணைக்கு ‘சூர்யா’ எனப் பெயரும் சூட்டப்பட்டுவிட்டது என்றும் தகவல்  வெளியாகியுள்ளது.

இந்த ஏவுகணையை நீர் மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் செலுத்தக்கூடியாதவும் (Submarine-launched ballistic missile) மேம்படுத்தும் திட்டத்திலும் டி.ஆர்.டி.ஓ உள்ளதாகத் தெரிகிறது.

இப்போது இந்தியாவிடம் தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் பிருத்வி குறைந்த தூர ஏவுகணை, தரையிலிருந்தும் கப்பல்களில் இருந்தும் கப்பல்களைத் தாக்கும் திரிசூல், தரையிலிருந்து விமானத்தையோ அல்லது விமானத்திலிருந்து விமானத்தையே தாக்கும் ஆகாஷ், இரவு-பகல் என எந்த நேரத்திலுந் கவச வாகனங்களைத் தாக்க உதவும் நாக் ஆகிய ஏவுகணைகளும், நீண்ட தூரம் சென்று தாக்கும் அக்னி வரிசையில் 1,2,3,4,5 ஆகிய ஏவுகணைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது


Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.