News Update :

ஆட்டோ - புதிய கட்டண அட்டை அமல்

Tuesday, September 17, 2013

புதிய கட்டண அட்டையை அமல் படுத்தாத ஆட்டோ உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைத்து கடந்த ஆகஸ்டு 25-ந் தேதி முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையடுத்து, திருத்திய கட்டணம் உள்பட பல்வேறு விவரங்களை கொண்ட அட்டை அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கப்பட்டது.

இந்த அட்டையை ஆட்டோவில் பயணம் செய்பவர்களுக்கு தெரியும் விதமாக ஓட்டுனர் இருக்கைக்கு பின்புறம் ஒட்டி வைக்கவேண்டும். இந்த நடைமுறை இன்று செப்டம்பர் 16 திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், புதிய கட்டண அட்டை வழங்கும் பணி, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நேற்று இரவு வரை நடந்தது.

சென்னையிலுள்ள 72 ஆயிரம் ஆட்டோக்களில், இதுவரை 52 ஆயிரம் ஆட்டோ உரிமையாளர்கள் மட்டுமே இந்த அட்டையை பெற்றுள்ளனர். எனவே மீதமுள்ள 20 ஆயிரம் ஆட்டோ உரிமையாளர்கள் மீது செப்டம்பர் 16 முதல் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளார்கள். இதற்காக போக்குவரத்து அதிகாரிகள் 40 பேர் தனித்தனி குழுக்களாக இன்று சென்னை முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

இதற்கிடையில் திருத்திய புதிய கட்டண மீட்டர்களை அக்டோபர் 15-ந் தேதிக்குள் ஆட்டோக்களில் பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு கால நிர்ணயம் செய்துள்ளது. இதனால், தங்கள் ஆட்டோக்களில் உள்ள பழைய மீட்டர்களில், புதிய கட்டணத்தை பதிவு செய்யும் பணியில் டிரைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை உள்பட பல இடங்களில் மீட்டர் பழுதுபார்க்கும் கடைகளில் ஆட்டோ டிரைவர்களின் கூட்டம் அலைமோதுகிறது. எனினும் ஆட்டோ மீட்டரில் புதிய கட்டணத்தை மாற்றி அமைக்கும் பணிக்கான காலஅவகாசத்தை தமிழக அரசு நீட்டிக்க வேண்டும் என்று ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.