News Update :

25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடு

Friday, September 13, 2013

உலக வங்கியின் கடன் பத்திரங்களில் 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இக்கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி கூறியதாவது:

உலக வங்கியிடமிருந்து 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நடப்பு நிதியாண்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வினியோகிப்பதற்காக 5 டன் உணவு தானியங்களை கூடுதலாக ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அரசு – தனியார் கூட்டுத் திட்டத்தின் கீழ் நான்கு பெரிய துறைமுகங்களில் சரக்கு கையாளும் முனையங்களை மேம்படுத்த உரிமம் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பருத்தி மீது 10 சதவீத ஏற்றுமதி வரி விதிப்பது குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில், பட்டுத் தொழிலை மேம்படுத்தும் வகையில் 12வது ஐந்தாண்டு திட்டத்தில் 890 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், 2017ம் ஆண்டுக்குள் 90 லட்சம் பேர் நேரடி மற்றும் மறைமுகமாக வேலைவாய்ப்பு பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை அடுத்து உலக வங்கியின் கடன் பத்திரங்களில் 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, ரிசர்வ் வங்கி முதலீடு செய்யும். இதன் மூலம் உலக வங்கியிடமிருந்து கடன் பெறும் அளவு விரிவடையும் என நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.