News Update :

உபி. அரசுக்கு இந்து அமைப்புகள் கண்டனம்

Thursday, August 22, 2013

லக்னோ: 2014-ம் ஆண்டு ‌பொதுத்தேர்தலை எதி்ர்க்கொள்ள தேசிய கட்சிகள் துவங்கி, மாநில கட்சிகள் வரை தீவிரம் காட்டி வரும் நிலையில், உ.பி.,யில் மீ்ண்டும் ராமர் கோவில் பிரச்னை அரசியலாக்க முயற்சி நடக்கிறது. அம்மாநிலத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு, நடத்த உள்ள யாத்திரைக்கு, ஆளும் சமாஜ்வாதி கட்சி தடை போட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பா.ஜ.வும் ,முலாயம்சிங்கிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
வி.எச்.பி. மெகா யாத்திரை

உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி உள்ளது. முதல்வராக அகிலேஷ் யாதவ் உள்ளார். இம்மாநிலத்தில் கடந்த பல ஆண்டுகளாக காங்., பா.ஜ. ஆகிய தேசிய கட்சிகளால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.இந்த சூழ்நிலையில் வரும் 25-ம் தேதி முதல் செப்டம்பர் 13-ம் தேதி வரை, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு, (வி.எச்.பி.) ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி அயோத்தி நோக்கி 300 கி.மீ. மெகா யாத்திரையை துவக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வி.எச்.பி. தலைவர்கள் முலாயம்சிங், அகிலேஷ் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். கடந்த 19-ம் தேதியன்று சமாஜ்வாதி கட்சி திடீரென வி.எச்.பி. யாத்திரை நடத்த அனுமதியில்லை என அறிவித்தது.மாநில அமைதிக்கு பங்கம் ஏற்படும் எனவும், அரசியல் காரணங்களுக்காக இந்த யாத்திரை நடத்த திட்டமிடபட்டுள்ளதாக கூறியது.
பா.ஜ. ஆர்.எஸ்.எஸ். கண்டனம்
சமாஜ்வாதி கட்சியின் இந்த அறிவிப்புக்கு வி.எச்.பி. தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். யா‌த்திரையை தடை செய்யும் முடிவை அகிலேஷ் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே பா.ஜ. மற்றும் ஆர்.எஸ்.எஸ். , சங்க்பரிவார் ஆகியவையும் அகிலேஷ் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. யாத்திரை தடை செய்வது சட்டவிரோதம் எனவும், வரப்போகும் தேர்தலை மனதில் கொண்டு , முலாயம்சிங் யாதவ் இது போன்ற நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவும், சிறுபான்மையினர் ஓட்டுவங்கிக்காக செயல்படுவது நல்லதல்ல என பல்வேறு இந்து அமைப்புகள் கொந்தளித்துள்ளனர்.
உபி.யில் ஆளும் சமாஜ்வாதி அரசு தடைவிதித்தும், யாத்திரை துவங்க வி.எச்.பி. முடிவு செய்துள்ளதையடுத்து உபி. அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்காக சிறப்பு அதிரடிப்படைகள், 12 கம்பெனி படைகளை இப்போதே குவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் , அயோத்தியில் இருந்து 84 கி.மீ. சுற்றளவில் உள்ள ஆறு மாவட்டங்களுக்கு வி.எச்.பி. அமைப்பினரின் யாத்திரை நுழைய தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உபி.யில் இப்போதே , ராமர் கோவில் சர்ச்சையால், பதட்டம் அதிகரித்துள்ளது.
Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.