News Update :

முல்லை பெரியாறு வழக்கு; முடிந்தது இரு தரப்பு வாதம்

Thursday, August 22, 2013

புதுடில்லி: முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பான வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக - கேரள அரசுகளின் தரப்பு வாதங்கள் முடிவடைந்துள்ளன. இதில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று நடந்த விசாரணையில் தமிழக அரசு தரப்பில் இறுதி கட்ட வாதம் நடந்தது.
முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 144 அடியாக உயர்த்துவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், தமிழகத்தி்ற்கு சாதகமாக, நீர்மட்டத்தை 144 அடி உயர்த்தலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, கேரளா முறையீடு செய்தது. அணை பலவீனமாக இருப்பதாலும், நீர்மட்டத்தை உயர்த்த எதி்ர்ப்பும் தெரிவித்தது. மேலும் கேரள அரசு, "கேரள நீர்ப்பாசனம் மற்றும் தண்ணீர் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம் - 2006' ஐ, நிறைவேற்றியது. இதன்மூலம், அணையின் நீர்மட்டத்தை, தமிழக அரசு உயர்த்துவதை தடுக்க முற்பட்டது. இதையடுத்து ஆனந்த் தலைமையிலான வல்லுனர் குழு அணையை பலகட்டங்களாக ஆய்வு செய்தது. அணை வலுவாக இருப்பதாக ‌கூறியது.
பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த வழக்கி‌னை சுப்ரீம்கோர்ட் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்த சில வாரங்களாக பல கட்டங்களாக இரு தரப்பு வாதம் நடந்தது. தமிழகம்- கேரளா அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர்.
முடிந்தது இரு தரப்பு வாதம்
இன்று இறுதி கட்ட வாதம் நடந்தது. இதில் தமிழக அரசு சார்பில், நடந்த வாதத்தில், நிலநடுக்கம், வெள்ள அபாயம் போன்ற பேரிடர் ஆபத்து காலங்களில் மட்டுமே, முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் குறித்து கேரளா முறையிடலாம். நீர்மட்டத்தை குறைப்பது பற்றி கோர்ட் மூலமாகத்தான் கேரளா தீர்வு காண முடியும். இந்த விவகாரத்தில், காவிரி நதிநீர்பிரச்னையில் கர்நாடகா அரசு போல் கேரளா செயல்படுவதாக வாதிடப்பட்டது.
தீர்ப்பு தள்ளி வைப்பு
இன்று வாதம்முடிந்த நிலையில், நீதிபதிகள் கூறியதாவது. முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் தொடர்பாக இரு மாநில அரசுகளும் நடந்து முடிந்துள்ள தங்கள் வாதங்களின் விவரங்களை எழுத்துபூர்வமாக இரு வாரங்களுக்குள் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் ,அந்த மனு 10 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும் எனவும் கூறினர். இதையடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் வழக்கை ஒத்தி வைத்தனர்.
Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.