News Update :

சொல்வதெல்லாம் நிஜமா?

Saturday, September 14, 2013

பாரதிய ஜனதா கட்சி நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியிருப்பதில் கடும் அதிருப்தி அடைந்துள்ள முன்னாள் தலைவர் அத்வானி கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுக்கக் கூடும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆர் எஸ் எஸ் என்னும் தனது தாயகமான வலதுசாரி அமைப்பின் கட்டளைக்குப் பணிந்து, நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முனைந்த பாரதிய ஜனதாவில், அவ்வாறு நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தவர் அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் முரளிமனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ் போன்ற தலைவர்களும் நரேந்திர மோடியை எதிர்த்து வந்தனர்.

தனது கருத்தை கட்சி உதாசீனம் செய்து விட்டதால், ஏற்கெனவே அறிவித்திருந்த படி கட்சிப் பணியாற்றாமல் கட்சியிலிருந்தே விலகி விடலாம் என அத்வானி முடிவு செய்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடப்பதற்கு முன்னதாக, நேற்று காலை நித்தின் கட்காரி, சுஷ்மா சுவராஜ், அனந்தகுமார் ஆகியோர் அத்வானியின் வீட்டுக்கே  சென்று ஆலோசனை நடத்திய போது , தனது இந்த முடிவை அத்வானி வெளியிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதுவும்  கூட நாடகமாக இருக்கலாம் என்ற சில தரப்பினர் கருத்து தெரிவித்து கொண்டு  உள்ளார்கள்.

அதுமட்டுமல்லாது  பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, கடந்த எட்டு ஆண்டுகளில், மூன்று முறை, பதவியை ராஜினாமா செய்துள்ளார்.கடந்த, 2005ல் பாகிஸ்தான் சென்ற அத்வானி, அந்நாட்டின் உயரிய தலைவர், முகமது அலி ஜின்னாவை, மதச்சார்பற்ற தலைவர் என, பாராட்டினார். இதையடுத்து, அவருக்கு, கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பவே, தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு, பல நாட்களுக்கு பிறகு, வாபஸ் பெற்றார்.அதே ஆண்டு, டிசம்பரில், மும்பையில்நடந்த கட்சியின் பார்லிமென்ட் குழுகூட்டத்தில், இப்பிரச்னை மீண்டும் எழவே, அத்வானி தன் கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய தலைவராக, ராஜ்நாத் சிங் பொறுப்பேற்றார்.இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலையொட்டி, குஜராத் முதல்வர், நரேந்திரமோடி, பா.ஜ.,வின், பிரச்சாரக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது முறையாக, அத்வானி, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.