தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் ஜூலை 10ம் தேதி வழங்கிய தீர்ப்பிற்கு பார்லி.,யில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு எதிராக மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதனை அடுத்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சனா பி.தேசாய் மற்றும் ரஞ்சன் கோகோய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நேற்று புதிய உத்தரவை அளித்துள்ளது. அதில், வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுவில் சொத்து விபரம் உள்ளிட்ட பல காலங்களை பூர்த்தி செய்யாமல் காலியாக விடுவதாகவும், இனி வரும் காலங்களில் தேர்தல் அதிகாரிகள் அந்த விபரங்களை கேட்டு பெற வேண்டும் எனவும், அவர்கள் தர மறுத்தால் மனுவை நிராகரிக்குமாறும் தெரிவித்துள்ளனர்.
தவறான தகவல்களை தந்தாலும் அவர்களின் மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இத்தகைய அத்யாவசிய விபரங்களை சரிபார்ப்பது வேட்புமனு சரிபார்க்கும் அதிகாரியின் கடமை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அரசியல் கட்சிகள் பெறும் கட்சி நிதிகள் வரும் முறை மற்றும் அவற்றின் பின்னணி புரியாத புதிராகவே உள்ளது. அரசியல் கட்சிகள் பெறும் 75 சதவீதத்திற்கும் அதிகமான நிதியின் பின்புலம் மர்மமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனநாயக சீர்திருத்த கழகம் அளித்துள்ள புள்ளிவிபர அடிப்படையில், 2004-05 மற்றும் 2011-12ம் ஆண்டுகளில் நாட்டின் முக்கிய 6 தேசிய கட்சிகள் பெற்ற மொத்த நிதி ரூ.4895.96 கோடி. இதில் 8.9சதவீதம் தொகை மட்டுமே யாரிடம் இருந்து பெறப்பட்டது என்ற விபரம் கொண்டதாக உள்ளது.
சுமார் ரூ.3674.50 கோடி யாரிடமிருந்து நிதியாக பெறப்பட்டது என தெரியவில்லை. காங்கிரஸ், பா.ஜ., தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறையிடம் அளித்த விபரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
இதில் காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 1951.07 கோடியை (82.5%) நிதியாக பெற்றுள்ளது. பா.ஜ., 73 சதவீதம் தொகையை நிதியாக பெற்றுள்ளது. இந்த தொகையில் பெரும்பாலானவை ரொக்க பணமாக பெற்றதாகும். இந்த கட்சி நிதிகள் குறித்த விபரங்கள் ஏன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவதில்லை என அரசு சாரா நிறுவனங்கள் முதல் சராசரி குடிமகன் வரை கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் அரசியல் கட்சிகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


0 comments:
Post a Comment